search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி"

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. #KarnatakaElectionResult2018 #CongressAlliance #KarnatakaJDS
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்ததால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பா.ஜ.க.வின் முன்னணி நிலவரம் சரியத் தொடங்கியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி பா.ஜ.க. 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 72 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

    இதையடுத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும்  வியூகம் வகுத்துள்ளது. இது தொடர்பாக ஜே.டி.எஸ். தலைவர் தேவே கவுடாவுடன் சோனியா காந்தி பேசியிருக்கிறார். குலாம் நபி ஆசாத்தும் பேசியுள்ளார்.

    இன்று பிற்பகல் பெங்களூரில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைப்பது பற்றி பேசப்பட்டது. முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் சம்மதித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்வதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.



    வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் திட்டத்துக்கு தேவகவுடா, குமாரசாமி இருவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார். ஆட்சியமைக்க உரிமை கோரி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆளுநரிடம் கடிதம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே, பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவும் ஆளுநரை சந்திக்க  நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #CongressAlliance #KarnatakaJDS
    ×